ஆன்மீகத்தின்
மறுபக்கம்
கோ.சுரேந்திரபாபு. செல்பேசி 9444468670, email; friendsurender@gmail.com
வெள்ளைத்தோல் உள்ளவன் படித்தவன், தியானம் யோகா செய்பவன் அறிவாளி,
காவி உடை புனிதமான வாழ்வை நடத்தும் யோகி, வெள்ளை ஆடை அணிபவன் தூய்மையாவன் என்று பல
வகையில் நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளது. அறிவியல் அடிப்படை இல்லாமல் உளவியல் அடிதளத்தில்
பலதரப்பட்ட நம்பிக்கைகள் பொது புத்தியாக வாழ்க்கையில்
பலரால் பின்பற்றப்படுகிறது. அறிவியல் அடிப்படை இல்லாத உறுதியான நம்பிக்கை மட்டும் ஆதாரமாக
கொண்ட மனசாட்சியே ஆன்மீக வாழ்வியலாக உள்ளது.
உடல் நலம் காக்க நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்
என மருத்துவ அறிவுரை அளிக்கப்படுகிறது. நாம்
உடற்பயிற்சியிலும் நடை பயிற்சியிலும் ஈடுபடும்போது உடலின் நரம்புகளும் தசை நார்களும்
இறுக்கத்திற்கு உள்ளாகிறது முறுக்கேறுகின்றன.
அப்போது உடலின் உறுப்புகளும் அதன் செல்களும்
அசைகின்றன, இதமாக இயக்கப்பட்டு மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இத்தகைய அசைவியக்க மாற்றம்தான்
உடற்கட்டு அமைப்பை நலமுடன் பாதுகாக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உடலின் உறுப்புகளும்
அதன் தசைநார்கள், எலும்புகள் மற்றும் அதன் செல்கள் அசைவு எற்படுத்துவதால் மட்டுமே உடல்
நலமுடன் இருக்கும் என்பது சரியானதல்ல. அதில் தேய்மானம் மட்டும் நிகழும். உடல் இயக்கத்தில் விருப்பமும் மனநிறைவும் ஏற்படும் வகையில் உடலுறுப்புகள்
ஈடுபட வேண்டும். மூளை மனம், உடல் ஆகிய மூன்றும் சேர்ந்து மகிழ்வுடன் இயங்க வேண்டும்.
மூளையின் கட்டளைப்படி மனமும் உடலும் சேர்ந்து இயங்கும் போது
சிந்தனைப்படைப்பு (கதை கவிதை ஓவியம் இசை போன்ற படைப்புகள்) அல்லது பொருள் உற்பத்தி
உருவாகிறது. விரல்களில் சிறு உளியை பற்றிக்கொண்டு மனதில் உள்ள ஓர் உருவத்தின் செய்கையை
சிலையாக செதுக்கும்போது,சிற்பியின் மூளைத்திறன், மனதின் உணர்வுகள், உடல் உறுப்புகளின்
இயக்கமும் சேர்ந்து செயல்படுகிறது. அதுவே மனக்குவிப்பு (CONCENTRATION) ஆகும்.
படைப்பாற்றலின் நிதான இயக்கம், மனதையும் உடலையும் ஒருசேர பயிற்சி
அளிக்கிறது. இதில் சிக்கல் அல்லது சிரமம் ஏற்படலாம் சில தடைகளும் வலிகளும் ஏற்படலாம்
அதனை ஏற்று அந்த சுகமான வலியை மனம் மற்றும் உடல் ஒருசேர அனுபவித்து போராட வேண்டும்.
இதமான வலியுடன் கூடிய உழைப்பின் வெளிப்பாடாக ஒரு படைப்பை நாம் செய்து முடித்து இதை
பார்க்கும் போது தமக்குள் அகமகிழ்வும், மனநிறைவும் ஏற்படுகிறது. நமது உழைப்பால் உருவான
படைப்பை பிறர் பார்த்து அனுபவித்து பாராட்டும்போது, படைப்பவன், பாராட்டுபவன் என்ற இரு
சாராரின் உடலின் இரத்தஓட்டமும் இரத்தப்பெருக்க இயக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது.. இதனால்
இருவர் உடலும் மனமும் இன்பத்தை அனுபவிக்கின்றன.
இன்பம் துன்பம் இரண்டும் உடலின் உள்ளேயிருந்து ஊற்றெடுக்கிறதா
அல்லது உடலுக்கு வெளியே உருவாகி உள்வாங்கி நுகரப்படுகிறதா ?
ஆன்மீகவாதிகள், அகமகிழ்வு என்பது உள்ளிருந்து ஊற்றெடுத்து மனதால்
நுகரப்படுகிறது என்கிறார்கள்.
இயங்கியல்வாதிகள் புறச்சூழலின் தாக்கத்தால்தான் மனிதன் இன்பம்
துன்பம் அனைத்தையும் மனதாலும் உடலாலும் அனுபவிக்கிறான் என்பார்கள்.
மனம் உடல் இரண்டையும் தெரிந்துகொள்ளுவோம். கண் காது மூக்கு வாய்,தோல்
என ஐந்து உறுப்புகளை, விரலால் தொட்டு காட்ட முடியும். மனம் எங்கே உள்ளது என காட்ட முடிவதில்லை.
ஐம்புலன்களின் வாயிலாக ஒளி, ஒலி, மணம், சுவை, தொடு உணர்வு என
புறசூழலிருந்து பெறும் அனுபவ அறிவு மூளையில் பதிவாகிறது. மூளையில் சேரும் ஐந்து அறிவும்
புதிய தன்மையில் ஆறாம் அறிவாக உருமாற்றம் பெறுகிறது. இது சமையில் அறையில் பல உணவுப்பொருட்கள்
கலந்து சமைத்து புதிய சுவையில் ஓர் உணவு தயாராவது போன்றது. அந்த புது உணவுக்கு தனியான
சுவை இருப்பது போல ஐம்புலன்களின் தாக்கத்தால் ஏற்பட்ட குணச்செயல்தான் மனம் என விளங்குகிறது.
இதற்கு உருவமோ வடிவமோ கிடையாது. செயல்தன்மை உள்ளது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான
செய்கைகள் மற்றும் குணச்சித்திரமாக அமைகிறது.
மனிதர்களின் குணச்சித்திரத்தை அவன் வாழும்
சமூக சூழ்நிலைதான் உருவாக்கி இயக்குகிறது.
மனித இனத்தின் வாழ்க்கை நிலை சீர்குலைந்து போக காரணமான சமூக சூழல்களை மாற்ற வேண்டும் என கூட்டாக சேர்ந்து போராடுகிறவர்கள்
முற்போக்காளர்கள் எனவும், பழைய நிலையிலேயே வசதிகளும் சுகங்களையும் அனுபவிப்பவர்கள்
அந்த மாற்றத்தை விரும்பாமல் தடுத்து நிறுத்தும் பழைமைவாதிகளாக உள்ளனர்.
இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு மதக்கோட்பாட்டின்
வழியை பின்பற்றி வாழ்கிறார்கள். ஆன்மீக வழியில் வாழ்பவர்கள், தியானப்பயிற்சி யோகா மற்றும்
யோகாசனம் மட்டும் செய்து உடல் உறுப்புகளையும், மனதையும் பாதுகாத்தால் சமூகம் முழுவதும்
நலமுடன் திகழுமென நம்புகிறார்கள்.
தியானம் செய்யும் போது, புறச்சூழலின் விசைகளை மூளை உணராதபடி ஓர் அமைதி நிலைக்கு மனம்,
மூளை உடல் வருத்திக்கொள்ளாமல் கொண்டு செல்கிறார்கள். தியான நிலையில், ஐம்புலன்களும்
உணரக்கூடிய புறவுலக இயக்க செயல்களை மனமோ மூளையோ இயங்காத அமைதி நிலைக்கு தம்மை தாமே பயிற்றுவிக்கிறார்கள்.
அந்த ஓய்வு நிலையை சாந்தி அல்லது சமாதி நிலை எனப்படுகிறது. இது ஒரு சுகமான அனுபவமே. இது சமூக சூழலின் நன்மை தீமைகளைப்பற்றி உணர்ந்து மாற்றவோ எதிர்க்கவோ
முடியாத போர்குணமற்ற மனநிலையை உருவாக்கும்.
கடுமையாக உழைத்தவன் உடலை தளர்த்தி ஓய்வு பெறும் போது உடல் சுகம்
காண்கிறது. அவனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது
மூளையும் ஓய்வடைகிறது. இத்தகைய ஓய்வும் தளர்வும்
அனுபவிக்கும் போது உடலுறுப்புகளும் மூளையும் அடுத்த கட்ட உற்பத்திக்காக அமைதியாக இயங்கிக்கொண்டுதான் இருக்கும். இந்த இதமான சுகம்
உழைப்பினால் உற்பத்தியில் ஈடுபட்டு அதனால்
ஏற்படும் களைப்பிற்குப் பின்னர், அனுபவிப்பதாகும்.
சமுதாயத்தில் எந்த படைப்போ உற்பத்தியோ தராத ஒருவன் தினமும் மனதிற்கும்
உடலுக்கும் தியானம் மற்றும் யோகப்பயிற்சிகளின் மூலம் சுகம் காண்பவன், மனதாலும் உடலாலும்
முழு சோம்பேறியாகி சும்மா கிடந்து சோம்பல்
முறிக்கிறான் என்று பொருள்.
கரடு முரடான சாலையில் ஓட்டாமல், வீட்டிற்குள் நிறுத்தி வைத்த
வண்டியை தினமும் துடைத்து, எண்ணெய் இட்டு, சக்கரங்களை சுழற்றியும் இயக்கியும் பாதுகாப்பாக
பராமரிப்பது போல், ஆன்மீகவாதிகள் சமூக வாழ்வின் பிரச்சினைகள்,முரண்பாடுகள் எதையும் எதிர்த்து போராடாமல், உடலையும் மனதையும்
அமைதி நிலையில் பராமரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் சில வினாடிகள் அல்லது சில நிமிடங்கள்
தினமும் தியானப் பயிற்சி செய்வதன் மூலம் மனதையும் உடலையும் தற்காலிக மரணத்தை அனுபவிக்க
செய்கிறார்கள்.
ஐம்புலன்களை புற உலக இயக்கங்களிலிருந்து விடுவித்து மனதை தனிமைப்படுத்தி
சுகமான அமைதி (சொரணையற்ற) நிலைக்கு பக்குவப்படுத்திக்கொள்வது ஆன்மீகபயிற்சி முறை ஆகும்.
ஐம்புலன்களையும் உரிய முறையில் ஒரு சேர இயக்கி படைப்பு மற்றும்
உற்பத்தியில் ஈடுபட்டு மகிழ்வு காண்பது உழைப்பாளர்களின்
செயல் ஆகும். இதுவே இயங்கியல் தத்துவ வாழ்வியலாகும்,
கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் தொழிலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் இந்த வாழ்வியலை
கடைபிடித்து உலகத்தை முன்நோக்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களின்
படைப்புகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் ஆவர்.
ஆன்மீகத்தின் மறுபக்கம் என்ன என தெரிந்து வாழ்பவனே போர்குணமிக்கவனாக
வாழ்கிறான் போராடி போராடி உலகில் பல சாதனைகள் செய்து மகிழ்கிறான்.
கோ.சுரேந்திரபாபு.---
உதவி ஆணையர்(ஓய்வு) சென்னை. email. friendsurender@gmail.com
No comments:
Post a Comment