கவலைப்படாத கிழவர்கள்
சங்கத்தில் உறுப்பினராகி விட்டீர்களா
கோ.சுரேந்திரபாபு சென்னை செல்பேசி 9444468670 email: friendsurender@gmail.com
வருத்தப்படாத
வாலிபர் சங்கம் இருக்கும் போது கவலைப்படாத கிழவர்கள் சங்கம் இருக்கவேண்டும் என்ற நினைப்பு
தவறில்லை.
உடலின்
தசையும் நரம்பும் எலும்பும் உறுதியான கட்டுக்குள் வைத்துக் கொண்டு மிடுக்காக நிற்பவன்
தன்னை வாலிபன் என்று கூறிக்கொள்ளும்
போது உணரும் தெம்பும் திமிறும்
அனுபவத்தெளிவோடும் வாழ்க்கைத் தத்துவங்களை
உணர்ந்து விவேகத்துடன் இருக்கும் முதுமையில் தன்னை கிழவன் என்று
அழைப்பதை தாழ்வான மனநிலையோடு பரிதாபமாக
உணர்கிறானே ஏன் ?
தள்ளாமைக்குள்ளான
முதியவர் நடக்கும் போது தடுமாற்றம் ஏற்பட்டு இடரும் போது எவரேனும் தாங்கிப்பிடித்தால் அந்த முதியவர் மனதில் மிகப்பெரிய ஆறுதலும் நன்றி
உணர்வும் பெருக்கெடுக்கிறது. அந்த மனநிலை முதியவர்கள் அனைவருக்கும் தேவைப்படுகிறது.
ஊன்றுகோல் துணையோடு நடப்பதை விட சகமனிதர் ஒருவருடைய தோள்களில் கைதாங்கலாக பிடித்துக்கொண்டு
நடக்கும் போது அவருக்கு சமூகத்தின் மீதும் பிற மனிதர்கள் மீதும் பற்றும் பாசமும் பெருகுகிறது.
அதுவே அவர் மனதில் மேலும் நாம் வாழ வேண்டும் என்ற ஆவலையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது
இன்றைய
உலகமய சமூக மாற்றத்தில் தனியுடைமை என்றால் நிதி மற்றும் வியாபார நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது
பற்றி மட்டும் ஆய்வு செய்கிறார்கள். மனிதர்களின் மனநிலையும் தனிமையாகவும் தனித்துவமாகவும்
இயக்குவது மரபாக மாறிவருகிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஊன்று கோல்போல்
தாங்கிப்பிடித்துகொண்டிருந்தோம். தற்காலத்தில் ஒருவர் உணர்வில் அடுத்தவர் பங்கேற்கவோ
தலையிடவோ கூடாது, அதிலும் முதியவர்கள் தனிமைப்பட்டு தங்கள் உணர்வுகளை மனச்சுமையாக அடைகாத்து மனதால் தளர்ந்து
போகிறார்கள்.
உடல்அமைப்பு
அழகாகவும் கட்டாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி
செய்ய ( பாடி ஜிம்) உள்ளது. முதுமையில் மனதை
கட்டுக்கோப்பாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ள மனம் மற்றும் மூளை பயிற்சி செய்ய (மைண்ட்
அண்டு பிரெய்ன் ஜிம்) உள்ளதா ? மூளை மற்றும் மனம், பயிற்சி செய்வது என்றால் என்ன? அதை
செய்வது எப்படி ?
ஒரு
இயந்திரம் இயங்காமல் சும்மா கிடந்தால் துரு பிடித்துவிடுவது போல் மனமும் சும்மா இருந்தால்
அதுவும் துருபிடித்த கருவி போல் அழிவுக்கு உள்ளாகும்.எனவே மனதையும் மூளையையும் இயக்கிக்கொண்டே
இருக்க வேண்டும். மனதை இயக்குவது என்பது உலக சூழல்களின் தாக்கத்தை அனுபவித்து நிதானம்
தவறாமல் மூளையில் பதிவு செய்துகொள்வதும், மூளைதரும் கட்டளைப்படி மனம் மற்றும் உடல்உறுப்புகள், ஒருமித்து செயல்பட்டு சமூகத்திற்கு படைப்புகளைத்
தர வேண்டும்.
நமது
குடும்பங்களில் கருவுற்ற பெண்கள் அதிகமாக உடலை வருத்திக்கொள்ள முடியாத நிறைமாதங்களில்
பிறக்கப்போகும் தன் குழந்தைக்காக குல்லா அல்லது உடையணியோ கைகளால் ஊசி நூல் கொண்டு பின்னுவார்கள்.அந்த
படைப்பில் ஈடுபடும் போது அவர்களின் விரல்கள் மட்டுமல்லாமல் மூளையும் இயங்குகிறது.அந்த
இயக்கத்தில் மனக்குவிப்பும் அகமகிழ்வுடன் படைப்பில் ஈடுபடுவார்கள். இந்த படைப்பியக்கத்தில்
மனம் மூளை மற்றும் உடல் மூன்றும் ஒருமித்து உழைக்கிறது. இப்படிப்பட்ட மனம் உடல் மூளை
மூன்றும் சேர்ந்து செயல்படுவதன் விளைவாக வயிற்றில் வளரும் குழந்தையின் உடலும் மூளையும்
வளர்ச்சிப்பக்குவத்தை பெறுகிறது.
மென்மையான
உழைப்பால் ஏதேனும் ஒரு வேலையில் மனநிறைவோடு ஈடுபடும் பயிற்சி முதுமையில் எல்லோரும்
செய்தாக வேண்டும். முதுமையின் மன அமைதிக்காக
ஆன்மீக மார்க்கத்தில் தியானம் யோகா
என பயிற்சி செய்கிறார்கள். படைப்புகளில்லாமல் தியானம் யோகா பயிற்சிகள் மூலம் உடல்மட்டும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, மனதால்
மற்றவர்கிளிடமிருந்து விலகி தனிமைப்பட்டு விடுகிறார்கள்.
நமது
முன்னோர்கள் காலத்தில் குடும்பத்தில் சிக்கல்கள் பிரச்சினைகள் உருவாகும் போது வீட்டிற்கு
பெரியவர் என்ற மரியாதையுடன் முதியவர்களை அழைத்து அமர்த்தி சிக்கலுக்கு தீர்வு சொல்ல
வைப்பார்கள். அவரது அனுபவ அறிவாற்றலோடு ஒரு
தெளிவான வழியை கூறுவார். அந்த செயலால் அவரது மனமும் மூளையும் இயக்கப்படுகிறது. இதுவே
முதியவர்களின் மனநல பயிற்சி ஆகிறது. இன்றைய குடும்ப உறவுகளில் மனநல பயிற்சிகள் முதியவர்களுக்கு கிடைப்பதில்லை. குடும்பத்திற்கு
வெளியே சமூக அரங்கில் நமக்கு அந்த பயிற்சிக்கான வாய்ப்புகளும் சூழல்களும் உருவாகின்றன.
நாம் சமூகப் போராட்டங்களிலிருந்து விலகி ஓடினால் மனம் மற்றும் உடல் நோய்க்கு ஆளாக வேண்டியதுதான்.
ஓர் அலுவலகத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில்
ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தலைமை தாங்கியவரை நிர்வாகம் பணிநீக்கம் சேய்துவிட்டது.
அவர் இதனால் அதிர்ந்து போகவில்லை அடுத்தகட்ட செயலில் ஈடுபடலானார் உச்ச நீதி மன்றம்+
வரை சென்று, போராடி மீண்டும் பணிக்கு திரும்பினார்.
அத்தோடு மட்டுமால்லாமல் அவர் மறுபடியும் சங்கத்தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் பிரச்சினைகளோடு தொடர்ந்து போராடினார் .
இன்னொருவர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை அவர் தவறான அடையாளம் காட்டப்பட்டு
லஞ்ச தடுப்பு அலுவலர்களால் கைது செய்யப்பட்டு வேலையை இழந்தார். இவரும் தனது அடுத்த
கட்ட நடவடிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் சென்று தனது உரிமைகளை மீட்டெடுத்தார். இருவரும்
வேறு வேறு தன்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் இருவரும் தனக்கு நிகழ்ந்த
சிக்கல்மிகுந்த தருணங்களை நிதானமாக எதிர்கொள்ளும் மனத்தெளிவும் எதையும் கையாளும் மனப்பக்குவம்
பெற்றிருந்தர்கள்.
இவ்விருவருக்கும் நேர் மாறான மனிதர்களும் உள்ளனர்.
இறைவா இன்று என் வாழ்க்கையில் எந்த இடையூறு, தடங்கல் ஏதும் வராமல் இந்தநாளை நடத்திக்கொடு
என்ற வேண்டுதலோடு நாளைதொடங்குவார்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை அப்பழுக்கு இல்லாமல்
நேர்கொட்டில் தங்கள் வாழ்க்கைப்பயணத்தை நடத்திட ஆசைப்படுவர். போராட்டங்கள் பிரச்சினைகளிலிருந்து
தங்களை விலக்கிக் கொள்வதால் தங்கள் வாழ்வில் சிக்கல்களை கணிக்கத் தெரியாமல் மிகைப்படுத்திய எதிர்மறை
மனப்பான்மையோடு மாரடைப்பில் இறப்பவர்களும்,
தற்கொலை செய்து கொள்பவர்களும் உள்ளனர். உலகின் முரண்பாடுகளை சவாலாக ஏற்று அதனை கையாள்வதிலும்
எதிர்த்து நின்று போராடுவதிலும் மகிழ்வும் ஆர்வமும் பக்குவமும் கொண்டவர்கள் மனதாலும்
உடலாலும் நலம் பெறுகின்றனர்.
தம்மை எதிலாவது ஈடுபடுத்திக்கொள்வதாக கருதி
சில முதியவர்கள் பணி ஓய்விற்குப்பின்னரும் பணம் சம்பாதிக்க வேலைக்குப்போகிறார்கள்.
அவர்கள் குறைந்த சம்பளத்தில். இயந்திரத் தன்மையில் இன்னொருத்தன் வளர்ச்சிக்காக உழைக்கும்போது
உடல் தேய்மானம் மட்டும் ஏற்படுகிறது பிறரின்
கட்டளைக்கும் கட்டுப்பாட்டிற்கும் அடிபணிந்து வேலை செய்வதால் அங்கே மனதோ மூளையோ மகிழ்வடைவதில்லை,
உடல் தேய்மானம் மட்டும் நிகழ்கிறது. மனம் தன்னை அறியாமல் தொய்வுக்கும் விரக்திக்கும்
உள்ளாகிறது.
முதுமையில் உடல் தளர்ந்த நிலையில்
கடின வேலைகளில் ஈடுபட முடியாது. என்றாலும் மனம், மூளை, உடல் மூன்றும் ஒருமித்து செயல்படும்
சிறு விளையாட்டுக்கள் அல்லது வேலைகளில் ஈடுபட வேண்டும்.நம் முன்னோர்கள் காலத்தில் பல்லாங்குழி,
ஆடுபுலி, தாயம் போன்ற விளையாட்டுகள் முதியவர்களின் மூளை மற்றும் உடலுக்கு இயக்கம் தருகின்ற
பயிற்சியாகவும் இருந்துள்ளது. நவீன காலத்தில்
’’கேரம்’’ முதியவர்களுக்கு உகந்த விளையாட்டு
ஆகும்.
இணக்கத்தோடு
பலர் சேர்ந்து செயல்படும் சங்கங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் பொருளாதாரம்
கலை இலக்கிய கலாச்சாரம் பற்றிய. நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருடன் அளித்தல்
பெறுதல் என்ற மனப்பக்குவத்தோடு பகிர்ந்திட வேண்டும். மனம் உடல் மூளை மூன்றும் சமூகத்தோடு
இணைந்து செயல்படுவதே சீரான உயிர் வாழ்க்கை.
கவலைப்படாத
கிழவர்கள் சங்கத்தில் உறுப்பினராகிவிட்டீர்களா அதில் அரங்கேற்ற உங்கள் சிந்தனைப் படைப்புகளைத்
தயாரிப்பீர்களா ?
கோ.சுரேந்திரபாபு,சென்னை. செல்பேசி 9444468670 மின் அஞ்சல்
friendsurender@gmail.com
No comments:
Post a Comment